Wednesday, May 4, 2011

'சின்ன குயில்' பாடும் பாட்டு கேட்குதாதா...???.....



சின்ன குயில் பாடும் பாட்டு கேட்குதாதா...???

எனக்கு இப்போது நினைத்தாலும் கேட்டுகொண்டிருக்கிறது. எப்படி அழுது அரற்றிருப்பார் என்று... எத்துனை மென்மையான பாடகி. முகத்திலும் குரலிலும் எப்போதும் கருணையை வழியவிட்டு கொண்டிருக்கும் அவருக்கு இப்படி ஒரு சோகம் கவ்விக்கொள்ள வேண்டுமா..? திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறக்கும் குழந்தைகள் தெய்வத்தின் வரம் என்றால், அதனை தட்டி பறிக்கும் தெய்வங்கள் எத்துனை குரூரமானது. எப்படியும் கடவுளை எல்லோரும் திட்டி தீர்த்திருக்ககூடும், எண்ணற்ற சாபங்களை வழங்கியிருக்ககூடும்... இனி எந்த தெய்வங்களுக்கும் பிள்ளைகள் பிறக்காமல் போகக்  கடவது....

இனி அந்த மென் சோக குரலை எப்போது கேட்டாலும் வலியும் வேதனையும் மனதை கணக்க செய்யும் தானே.... மனசு சரியில்லாத பல பொழுதுகளில் நம் மனதை ஆற்றிய இந்த இசைவானியின் மனதை இப்போது யார் ஆற்றுவார்... 

"ஏதேதோ எண்ணம்" வளர்கிறது...இசையின்  "பாடறியாது, படிப்பறியாது" இருந்த என்னை இவரின் குரல் தான் "என்னவோ ராகம் என்னன்னவோ தாளம், தலைய ஆட்டும் புரியாத கூட்டம்" என்று அறிமுகம் செய்து, "சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கப்புறந்தான்" என்று உபதேசமும் செய்து இசையை பயிற்றுவித்தது... 

எனது மொபைலில் அடிக்கடி ரிப்பீட் போட்டு கேட்கும் பாடல் "எங்கே எனது கவிதை". சமிபத்தில் ஒரு பேருந்து பயணத்தில் திரும்பவும் அந்த பாடலை கேட்டேன். அந்த பாடலின் காதல் வலி... அன்றைக்கு கேட்கும் போது ஒரு தாயின் உயிர் வலியாகவே உணர்ந்தேன்... அப்போது ஏற்ப்பட்ட மனஓட்டங்கள் தான் இந்த பதிவு.... 

அந்த பாடலின் முதல் சரணம் சற்று மாற்றி...

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
மையல்(?) பாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த குழந்தையை 
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன் 

வேறு என்ன சொல்லமுடியும்....எத்தனையோ பேருக்கு நம்பிக்கை ஊட்டிய அவர் பாடலின் துணை கொண்டே...

"மனமே.... மனமே நீ மாறிவிடு...." 

No comments: