Monday, August 16, 2010

ராவணன் சீதையின் பக்...பக்...பக்... காதல்...

               சமிபத்தில் மணிரத்தினம் அவர்களின் ராவணன் படம் பார்த்தேன். படம் நிறைய விமர்சனங்களை தாங்கி வெளியே வந்திருப்பதை யாவரும் அறிந்ததே. நான் அந்த விமர்சன எல்லைகளுக்குள்  போக விரும்பவில்லை. குரு படத்தில் ஒரு வசனம் வரும். மாதவனை பார்த்து குருபாய் தேசிகன்(அபிஷேக்) கூறுவார். "நீ குருபாயை ஜெயிக்கணும் என்றால் நீ குருபாயாக  இருக்கணும்..." என்று. அதேபோல் மணிரத்னத்தை விமர்சிக்க வேண்டும் என்றால் நாம் மணிரத்னாமாக இருக்க வேண்டும். ஆகவே நான் அதற்குள் போக விரும்பவில்லை. 

        கதைகளங்களின் நேட்டிவிட்டி குறித்த முரண்களை எல்லாம் தாண்டி அந்த படத்தில் கையாளபட்டிருக்கும் நுண்ணிய காதல், மிக நுட்பமான எதிர்பாலின தோழமை-இறுதி காட்சியில் ஐஸ்வர்யாராய்யின் பக்,பக்,பக், வசனத்தில் இருந்து வெளிபடுவது, எனக்கு என் கல்லூரி நாட்களில் நான் எழுதிய நாடகம் ஒன்றை நினைவுபடுத்துகிறது. ராமனின் சந்தேக பார்வையை குறித்து நிறைய புனைவுகள் நவீன இலக்கியத்தில் காண படுகிறது... அதிலேயும் பெண்ணுரிமை குறித்து பேசும் அனைத்து எழுத்தாளர்களும் இந்த புனைவுகளை நிச்சயம் தழுவி இருப்பார்கள். சமிபத்தில் கற்றது தமிழ் இயக்குனர் ராம் அவர்கள் கூட ராமனின் ஆணாதிக்க சந்தேகத்தை, சீதையும்-அசோகாவனத்தில் உள்ள புறாவும் பேசிகொல்வது போல ஒரு சிறுகதை தீட்டி இருந்தார்.


என் கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் சுதந்திர தினத்திற்கு நாடகம் ஒன்றை போடுவதற்காக தலைப்பை தேடிகொண்டிருந்தேன். அப்போது சில நாட்களுக்கு முன்னர் ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. எழுத்தாளர் ராசி.அழகப்பனும், நடிகர் கமல்ஹாசனும் ஒரு கதைவிவாதத்தில் இந்த கான்செப்டை பகிர்ந்துகொண்டதாக படித்தேன். சீதை தன் கற்பை நிரூபிக்க அக்னி குண்டத்தில் இறங்க, அந்த அக்னி குண்டத்தில் அக்னி தேவனுக்கும் சீதைக்குமான காதல் உரையாடலாக இந்த புனைவு பயணிக்கிறது... ஒரு வேலை வருங்காலத்தில் இதை எதாவது ஒரு கட்டத்தில் தன் படங்களில் கமல் அவர்கள் இதை பயன்படுத்தக்கூடும். அவர்களின் அந்த விவாதத்தை நான் என் நாடகத்திற்கு கருப்பொருளாக கொண்டு உருவாக்கினேன். 

இரண்டு நாட்கள், எல்லா மன்த்லி டெஸ்ட்களிலும் பைலாகி, அசைன்மென்ட், இம்போசிஷன் எல்லாம் அனுபவித்து எழுதிய வரலாற்று பெருமை இந்த நாடகத்துக்கு உண்டு. அப்படி எழுதியும் இந்துத்வா காலேஜ் அதற்கு அனுமதி தரவில்லை என்பது வேறு விஷயம். எனது வசன கவிதையை மிகவும் பாராட்டி ஊக்குவித்ததோடு நிறைய விமர்சனங்களையும் முன் வைத்து அறிவூட்டிய நான் மதிக்கும் ஒரே ஆசிரியர் திரு.ஜெயமணி மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. பழுத்த ஆன்மிக சிந்தனைவாதியாகவும், முற்போக்காளரும், சமுக சேவகருமான திரு.ஜெயமணி அவர்கள், என் கத்துக்குட்டி துடுக்குத்தனத்தை பாராட்டியது மட்டும் அன்றி என் பல கத்துக்குட்டி நாடகங்களுக்கும் (அரங்கேற்றம் காணாத) பல ரசவாத சிந்தனைகளுக்கும்  முதல் ரசிகராகவும், விமர்சகராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆத்திகம் நாத்திகம் என்ற நூற்றாண்டு விவாதங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. பெண்ணுரிமை குறித்த புனைவு என்ற அளவுகோலில் மட்டும் ராம பக்தர்கள் பார்த்தல் ரத்த கொதிப்பை குறைத்துகொள்ளலாம்.    


****************************************************
 ராவணன் சீதையின் பக்...பக்...பக்... காதல்...
****************************************************
இடம்: ராவணனை அழித்த கையோடு சீதையை சந்தேகித்து அக்னிகுண்டத்தில் ஊரார் முன்னே இறங்க சொன்ன இடம்...
கதாபாத்திரங்கள்: சீதை, அக்னிதேவன்.

அக்னிதேவன்: வாருங்கள் தேவி...தங்கள் வரவால் நாணும் சற்று குளிர்ந்துபோனேன்... தங்கள் வரவின் நோக்கம் என்னவோ...?

சீதை: மாசுபடாத மல்லிகைப் பூ நானும்;
மறுதளித்துவிட்டன் மாதவன் என்னை; 
மண்டியிட்டு கூறியும் மனமிறங்கவில்லையே;
மணவாளன் கூறியதால் நின் வாசல் தேடி வந்தேனே;

அக்னிதேவன்: மனமென்னும் குரங்கின் பால் மாட்டிகொண்டன் மாதவன்; மடைதிறந்த அன்பாளன்;வான்புகழ் அறிவாளன்; 
அணுதினமும் அவனிக்கும் அவனா உன்னை அவமானபடுத்தியவன்? 
மணமில்லா நார் ஒன்றை வாச நறுச்சென்டென்று எண்ணிவிட்டேன்...தவறு..!

சீதை: இருவரின் நோக்கில் காதல் மலர்ந்தது - கன்னிமாடம் துறந்தேன்;
கைகேயின் சதியில் வீடு முறிந்தது - அரன்மாடம் துறந்தேன்;
ஊழ்வினையின் உன்னதம் அறிந்தவன் - உபத்திர 
உபநிடதங்களில் ஊறி திளைத்துவிட்டான்;
ஊருக்கு பயந்த பேடியாய்  - என் கணவன்; 
போரிலே பேரெடுத்த மதிப்பை காப்பாற்ற மனைவியை மாசடையவைத்துவிட்டான்; 
இனி அவனிடன் வாழ்வது அறிவற்றது; அன்பற்றது; 
அந்நாளில் அயராத காதல் எல்லாம் 
ஊராரின் பேச்சுக்கு அயர்ந்து போனது; 
மனதின் பாரம் கனத்துப்போனது; 
இனி வேண்டாம் அந்த வாழ்க்கை; எடுத்துகொள் தேவரே; நின் அனல் கைகளில்என்னை அணைத்துகொள்வாயாக...!!!

அக்னிதேவன்: ஆன்றவிழ்ந்த அவையோர் முன்னிலையில் 
அவிந்து போவேன் என்று 
அறைந்துவிட்டு வந்த அமிழ்தே...!
நின்னை எப்படி அவிப்பது?! அவ்வாறு செய்யேன்...அறிவில்லா ராமனின் அறியாமை உண்மையாகிவிடதா..?
ஜனகரின் மைதிலியே..! 
நான் சொல்வதை கேட்டு என்னையும் சராசரி ஆணாக்கி விடாதே...! 
மாறாத பதுமையின் பால் காதல் கொள்ளும் கனவான்களில் நான் மட்டும் விதிவிலக்கா? 
நாணும் காதல் கொண்டேன்! தங்கள் மேல் தான்...! ஆச்சர்யம் வேண்டாம்; அனுதாபத்தோடு கேளுங்கள்!... இந்த ஒரு தலை காதலின் கலையாத கனவு காதலை...?!

பனிகாற்று பரவும் ஈழ பிரதேசம்; 
கூதிர்கால குளிருக்கு எண்ணெய் ஊற்றி 
என்னை வளர்த்தனர் ராவண சேவகிகள்; 
அது அசோகா வனம்; உன் அழகை 
அடைய ராவணன் ஏற்படுத்திய அழகிய வனம்; 
சோலைபூக்களில் சோரம்போனவளாய்... 
சோமன் கனவில் காமனை தேடுபவளாய் 
உன் பார்வை இருந்ததை கண்டு  
என்னையும் குளிர் தொற்றிகொண்டது...
அது வரை வெயிலின் உக்கிரத்தை அறிந்திராத நான், அன்று தான் குளிரின் அடர்த்தியை சுள்ளென்ற சுகம் என்னை ஆட்கொண்டது... 
அன்று நான் குளிர் தென்றலில் வெட்கத்தில் நெளிவதை வெளிப்படையாய் காட்டினேன்... காற்றின் நாவுகளில் கவிதைபேசும் கவின்மிகு பார்வையில் கரைந்துபோனேன்;

புரிகிறது!..தேவி நான் கொஞ்சம் எல்லை மீறுகிறேன் தான்..
சங்கோஜம் வேண்டாம்... நான் கொண்ட காதல் அன்றே என் எல்லையில்  எரிந்துவிட்டது...!!

   
அனுமன் ஏந்தி வந்த கணையாழியில் தெரிந்தது நீ நின் கணவன் மேல் வைத்திருந்த கலையாத காதலை; அன்றே அது கலைத்துவிட்டது நான் உன் மேல் கொண்ட காதலை; என் காதலின் இயலாமையில், உக்கிரமடைந்து இந்த இலங்கையையே அழிக்க முற்பட்டேன்... 

உன் காதலுக்காக என் காதலை தியாகம் செய்தேன்;இன்று நீயே வந்து ஏற்றுக்கொள் என்கிறாய்; இப்போதும் உனக்காகவே தியாகம் செய்கிறேன்;பெண் சமுகத்தின் உன்னத கர்ப்பு ராமன் போன்றோரின் ஆணாதிக்க மனிதர்களிடம் கறைபட்டு தான் கிடக்கிறது.... என் செய்வது...

சீதை: ராவணன் கூட என் அனுமதிக்காக காத்திருந்தான்; 
நானே ஏற்றுகொள் என்ற போதும் உன் காதலை என் நலனுக்காக தியாகம் செய்தாய்; ஊரே ராமராஜ்ய கனவு கண்டு நீதியை வகுத்துகொண்டிருக்க, ராமனோ ஊருக்காக என் மனதை வாள்கொண்டு வகுக்கிறான்;
தூயவன் ராமன் ஏகபத்தினி விரதன் என்று பட்டம் சூட்டுகிறார்கள்,யாருக்கு தெரியும் அவன் ஏக பத்தினி விரதனா? இல்லை ஏக பட்ட பத்தினிகளை கொண்ட விரகனா..? பெண் மட்டும் சந்தேகிக்க கூடாது; பெண்ணை மட்டும் தான் சந்தேகிக்க வேண்டும்; பெண் என்றாலே சோதனைக்கு உரியவள் தான் தேவரே...!

அக்னிதேவன்: சரி! சரி! நேரம் ஆகிவிட்டது இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீ வெளியே போகவில்லை என்றால் மன்னருக்கு ரகுவம்சம் தழைக்க வேண்டும், ஆண் தனியாக துயரபடுவான் என ஆணாதிக்க சமுதாயம் இன்னொரு பெண்ணை பலிகடாவாக்கிவிடும்...
என் அக்னி கைகளை தளர்த்திகொள்கிறேன், செல்வாயாக..! வாழ்நாள் முழுவதும் ராமன் குற்ற உணர்ச்சியில் புழுங்கி தவிக்க வேண்டும்; அய்யகோ ஒரு பத்தினி பெட்டகத்தை, தன்னை நம்பி வந்த தன்னிகரில்லா தெய்வத்தை ஊருக்கு பயந்து சந்தேகித்தோமே..?என்று அவன் மனம் குமுற வேண்டும்;அடி நெஞ்சு புகைய வேண்டும்;


என்றாவது ஒரு நாள் பெண்கள் முழு சுதந்திரத்தோடு மூச்சு விடுவர்... அந்த மூச்சின் வெப்பம், நான் உன் மீது கொண்ட தார்மீக காதலை உலகம் நியாப்படுத்தும்; செல்வாயாக..!
என் அனல் கைகள் தகிக்கட்டும் ;
பெண் வாழ்வில் பூக்கள் பூக்கட்டும்;

****************************************** 
 நன்றி: திரு. கமல்ஹாசன், எழுத்தாளர் திரு.ராசி.அழகப்பன்.

3 comments:

puduvairamji.blogspot.com said...

arputham..

Shankar said...

அந்த மூச்சின் வெப்பம், நான் உன் மீது கொண்ட தார்மீக காதலை உலகம் நியாப்படுத்தும்

மெய்சிலிர்க்க வைத்தது இவ்வாழ்ந்த சிந்தனை..

அனைவருக்கும் அன்பு  said...

எதேச்சையாய் ஒரு தேடுதலில் உள் நுழைந்தேன் வரிகளை வாசிக்கையில் புது உலகில் பயணிக்கும் உணர்வு ஆண்களின் விலங்குகளில் விடிவிக்கபட்டு சுதந்திர பறவையாய் சிறகு விரித்து பறந்தேன் ................படித்து முடித்ததும் விழுந்துதான் போனேன் மீண்டும் இந்த பாவ பூமியில் .................அந்த சில நொடிகள் ஆசுவாசத்தை தந்த உங்கள் எழுத்துகளுக்கு நன்றி .............