Wednesday, September 8, 2010

'மற்றவள்' - ஒரு பார்வை...

என் ஆதர்ஷ எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் கதை திரைக்கதை வசனத்தில் "மற்றவள்" குறும்படம் பார்த்தேன். நண்பர்கள் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம். அவரின் முந்தைய படைப்பான "கர்ண மோட்சம்" குறும்படத்தை போல நிச்சயம் பல விருதுகளை வாங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 


புத்தக அங்காடிகளில் மிக அதிக அளவில் விற்று தீரும் சுயமுனேற்ற புத்தகங்களில் கூறப்படும் வெற்று அறிவுரைகளும், ஏற்கெனவே குறுகி போய் கிடக்கும் மனித மனங்களின் மனதில் இன்னும் இன்னும் சுயநல கருத்துகளையும் பரப்பி வியாபாரம் செய்கிறார்கள். ஆனால் எஸ்.ரா அவர்கள் ஒருபோதும் அறிவுரை வழங்குவதில்லை, அறிவை தான் வழங்குகிறார்.அங்கே தான் அவரின் எழுத்தாளுமையில் அனைவரும் கிறங்கிவிடுகிறோம்.

மெத்த படித்தவர்கள் பெரும்பாலும் ஞானியை போல் பேசுவார்கள். அனால் எஸ்.ரா அவர்கள் எப்போதும் ஒரு குழந்தையின் மனநிலையில் தான் உள்ளார். உயர்ந்த சித்தாந்தங்களையோ, புரியாத கோட்பாடுகளையோ காண்பித்து தான் அறிவாளி என்று காட்டிகொல்வது இல்லை. ஒரு குழந்தையை போல இந்த உலகத்தை கற்கிறார். அதை ஒரு குழந்தையை போல தன் வாசகர்களிடம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் விவரிக்கிறார்.ஒரு குழந்தையின் உலகத்தில் தன்னை அர்பணிக்கிறார். அவரை வாசிக்கும் ஒவ்வொவொரு முறையும் என்னுள் இருக்கும் குழந்தைத்தனம் இயல்பாகவே வெளிப்படுவது ஆச்சர்யம் இல்லை.


"மற்றவள்" குறும்படம் படைப்பு ரசனை என்ற அளவுகோளை தாண்டி அது ஏற்படுத்தும் விழிப்புணர்வு சமிபகாலங்களின் தவறான அணுகுமுறைக்கு சரியான மருந்தாக உள்ளது. படம் விதைக்கும் கேள்வி அசாதாரணமானது. " நான் ஏன் மின்மினியா இல்லை". படம் பார்க்கும் பொது இந்த கேள்வி என்னை உலுக்கியது.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் நகரத்தின் நாகரிக வாழ்க்கையில், ஒரே சொடுக்கில் இணையங்களின் அனைத்து தொழில்நுட்ப முன்னேற்றங்களை தெரிந்து கொள்ளும் திறமைசாலி மாணவர்களை உருவாக்கி கொண்டிருக்கும் இதே நாட்டில் தான் தன் பாவாடை நாடவை கூட மாற்ற முடியாத, முக்கோணம் எப்படி இருக்கு என்று தெரியாத- 'ஈசல்' போன்ற சிறுமிகள் பயிலுகிறார்கள்.
இத்துனை ஏற்ற தாழ்வுகளில் படிக்கும் மாணவர்களுக்கான சமத்துவ தகுதி தான் இந்த மானங்கெட்ட தேர்வு முறைகள்... இந்தியாவின் சமத்துவம் தேர்வுகளில் தான் வெளிபடுகிறது.

அதன் வெளிப்பாடு தான் சமிபத்திய போலி மதிப்பெண் சான்றிதழ் குற்றம்.  நகரத்தில் படிக்கும் அறிவாளி மாணவர்களெல்லாம் நல்ல வசதிகளோடு அதிக  இடங்களில் "தகுதியோடு" (கவனிக்க "தகுதியோடு") சுயநிதி கல்லூரிகளில் சுயம் இழந்து படித்து நாட்டை காப்பாற்ற... பெரும்பான்மை வசதி இல்லாத ஏழை மாணவர்கள் குறைந்த இடங்களை வைத்துள்ள அரசு கல்லூரிகளில் கால் கடுக்க காத்துகொன்டிருக்கிறார்கள். இந்த குற்ற பின்னணியின் ஆணி வேரை தான் இந்த படம் மறைமுகமாக அலசுகிறது.  இந்த குற்றத்தில் மாட்டி கொண்ட அநேக மாணவர்கள் ஊராட்சி பள்ளிகளில், வசதி குறைந்த, ஆசிரியர்கள் இல்லாத கிராம பள்ளிகளில் படிக்கும் முதல் தலைமுறை மாணவர்கள் தான். 

இங்கே குற்றங்கள் நியாயபடுத்துவதாக கருதாதீர்கள். ஆனால் நியாயமான குற்றங்கள் இங்கே கருதபடுவதேல்லை என்பது தான் என் வருத்தம். 

லட்சகணக்கில் நிதியை கேட்கும் சுயநிதி கல்லூரிகளை ஒடுக்கி இருந்தால் எப்படியாவது மிக குறைந்த கட்டணத்தில் அரசு இடங்களை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி எதிர்கால இந்தியா குற்றவாளி கூண்டில் நின்றிருக்குமா...? வருடா வருடம் "அதிக  தொகை வசூலிக்கும் கல்லூரிமீது நடவடிக்கை எடுக்க படும்" என்ற அறிவிப்பும், "வரும் ஆண்டுகளில் ஐ. டி யில் ஒரு லட்சம் பேருக்கு வேலை என்ற வியாபார தந்திரமும்" அதை கையாளுகின்ற கல்வி காவலர்களும் தான் உண்மையான குற்ற வாளிகள் என்பது நான் கூறி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 

இதை எல்லாவற்றையும் களைத்தெறிந்து பணமுதலைகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொன்முடியையும் ஜெகத்ரட்சகனையும் நம்பிக்கொண்டு இருக்கிறோமே... இதை விட ஜனநாயக சீர்கேடு வேரேதும் இருக்க முடியாது.

போலி மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பித்த மாணவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்த நீதிமான்களே... இதுவரை எத்தனை அடிப்படை வசதிகள் இல்லாத கல்லூரிகளையும், அதிகபடியான கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளையும், ஆகியவற்றின் அங்கீகாரத்தையும் ரத்து செய்திருக்கிறீர்...? அப்படி ரத்து செய்வீர்களேயானால் சம்பத்தப்பட்ட அமைச்சர்களின் கல்வி நிறுவனங்களையே ரத்து செய்தாக வேண்டும்... அந்த ஜனநாயக புரட்சிகளோ.. அற்புதங்களோ.. நிகழபோவதில்லை... 

முற்றிலும் தகுதியில்லாத ஆசிரியர்களுக்கு போலியான சான்றிதழ்களை ஆய்வின் பொது கொடுத்து பிழைப்பு நடத்தும் கல்வி காவலர்களின் கேவலத்தை நான் படித்த பல்லவன் பொறியியல் கல்லூரியிலேயே பார்த்திருக்கிறேன்...

பள்ளிக்கூடம் வாய்க்க படாத அந்த சிறுமி பென்சிலை பார்த்ததும் பரவசம் கொள்வதும், தான் எழ்துவதை மற்றவர்கள் பார்க்கும் போது கூச்சமென ஓடி ஒளிவதும், ஈசல் நம் மனதில் பதிந்துவிடுகிறாள். "படிக்கிற பிள்ளைக பள்ளிகொடம் வரலேன்னா நியாபகம் வச்சிபீங்க.... நான் படிக்காதவ... மக்கு... என்ன எப்படி நியாபகம் வச்சிபீங்க..." என்று தன் ஆசிரியரை கேட்கும் இடத்தில் ஒட்டு மொத்த கல்விமுறையையும் கூண்டில் ஏற்றுகிறாள்.

ஈசல் என்கிற சி.மகேஸ்வரி, படிக்க முடியாமல் போன விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதியாகவே அவள் ஆசிரியருக்கு கடிதம் எழுதுகிறாள். அவளின் கடிதத்தில் கண்டனம் தெரிகிறது,ஆசை தெரிகிறது, ஏக்கம் தெரிகிறது, ஆற்றாமை தெரிகிறது, அனுபவம் தெரிகிறது. சிந்திக்கவே விடாத கல்வி முறையில் பயின்ற நமக்கு இந்த படம் மிகுந்த சிந்தனைக்குரியது....

'தாரே ஜாமீன் பர்', '3 இடியட்ஸ்', போன்று மிக பெரிய அளவில் கொண்டாடப்படவேண்டிய உட்கருத்து மிக லாவகமாக பொதித்து வைத்திருப்பதை படம் பார்ப்பவர்கள் உணருவார்கள். 

மனதை கசக்கும் சோகம் இல்லை. பார்வையாளர்களிடம் பரிதாபத்தை யாசிக்கவில்லை. மிக சாதாரண யதார்தத்தை முகத்தில் அறைகிறது. கண்டுகொள்ளாமையும், புறக்கணிப்பும் எவ்வளவு கனமானது..? கதைகளே இல்லாத மசாலா திரைப்படங்களை பார்த்து பழகிய நமக்கு ஈசல் போன்ற எத்தனை கதைசொல்லிகளை இழந்திருப்போம். நிச்சயம் எல்லா பள்ளிகூடங்களிலும் ஆசிரியர்களுக்கும் போட்டு காட்டவேண்டிய படம். பார்த்து உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்... 
மற்றவள் குறும்படத்தின் காணொளியை காண இந்த இணைப்பை சொடுக்குங்கள்...
 http://www.youtube.com/watch?v=_Al94vZlxHs 

பின்குறிப்பு:  
கல்வியின் உன்னதங்களை அறியாத முன்னாள் சாரயங்காய்ச்சிகலாகிய, முன்னாள் கட்ட பஞ்சயத்து ரவுடிகளும்மாகிய இந்நாள் கல்விகாவலர்களுக்கும், கல்விநிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும் அவசியம் போட்டு காண்பித்துவிடாதீர்கள்... அப்படியே பார்த்தாலும் அவர்களுக்கு புரிய போவது இல்லை என்பது வேறு விஷயம்...