Sunday, October 17, 2010

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


கிழிசல் மிக்க பத்து ருபாய்
பயன்படாத நோட்டு ஒன்று  
கீதைகள் போதித்து சென்றது
கீதைகளும் பயன்படுவதில்லை
என்ற உண்மை புரியாமல்


காந்தியின் முகத்தில் சுத்தமில்லாத 
கைகளின் அழுக்கு அப்பியிருந்தது
அப்பழுக்கற்ற மனிதரின் முகத்தில் 
பூசப்பட்டது கரியாக கூட இருக்கலாம்


ரூபாய் நோட்டின் ஓரங்கள் மட்டுமே 
எப்போதும் கிழிபடுகிறது 
அரசாங்கத்தின் கொள்கைகள் விளிம்புநிலை
மனிதர்களை கிழிப்பதை போல 


வாங்க மறுத்த விலைபோகாத நோட்டு 
வெறித்து பார்க்கிறது என்னை 
அலைகழிக்கப்பட்ட பெண்ணை போல 
பதவிழந்த மந்திரியை போல


நோட்டில் பதிந்திருந்த அச்சுகள் 
எல்லாம் அழிக்கபட்டிருந்தது
ஈழமண்ணின் கொடூர சாட்சியங்கள்  
அழிக்கப்பட்டதை போல
கொதித்தெழுந்த கோப தமிழர்களின் 
உரிமைகள் அழிக்கப்பட்டதை போல


இந்த செல்லாக்காசு சென்றுவந்த 
பயணங்களின் களைப்பு அடர்ந்திருந்தது 
சிறுவன் தன் பாட்டி கொடுத்ததாய்  
ஊருக்கெல்லாம் காண்பித்து எக்களித்திருப்பான் 
ஒரு விசேடநாளில் ஏழைதகப்பன் பிள்ளைகளுக்கு
சீனிதின்பண்டன்களை வாங்கிகொடுத்திருக்ககூடும்
பால்யத்தில் தன்மாமன் பெண்ணுக்காய்  
கமர்கட்டோ ரசகுல்லாவோ வாங்கியிருக்ககூடும் 
கட்டணம் செலுத்தமுடியாத  வறுமைமாணவன்
அபராதமாக இதை கட்டியிரிருக்ககூடும்
குடிகார கணவன் தன்மனைவின் மார்பக
இடுக்கிலிருந்து பலவந்தமாய் எடுத்திருக்ககூடும்

வெள்ளாமைகளை விட 
வறுமைகளை தான்
அதிகம் நினைவு 
கொள்ளவைக்கிறது 
கிழிந்த நோட்டுகள் 

மைல்கள் கடந்து சென்றுவந்த காசு 
செல்லாக்காசாக சொல்லும் கதைகளில் 
செல்லாத ஓரங்களில் ஈ(ரா)றாக
கிழிந்து ஒலித்துகொண்டிருக்கிறது
எதிர்மறையாய்