Tuesday, November 23, 2010

காண் என்றது கடல்...

      "அய்யோ... எவ்ளோ தண்ணி சூப்பர்ப்பா...", "கடலோட அந்தாண்ட பக்கம் என்னப்பா இருக்கு?","கடல்ல இருக்க தண்ணி பூமியிலுருந்து வெளிய கொட்டினா என்ன ஆகும்..?", "கடல் ஏம்ப்பா ப்ளு கலர்ல இருக்கு...","என்ன இப்படி உப்பு கரிக்குது", "சூரியன் தினமும் கடலுக்கு போயிட்டு வருதே, குளிச்சிட்டு வருதா?..., தண்ணிக்கு சுடாதா?"," பாற்கடல்ல பெருமாள் படுத்திருக்காரே இங்கருந்து பார்த்தா அவர் தெரிவாரா...?", "நம்ம பாலாத்துல தண்ணியே இல்லையே... இங்கேருந்து கொஞ்சம் கொண்டு போகலாமா..?"

பால்யத்தில் முதன்முதலாக அறிமுகமான கடலைப்பற்றிய என் ஆச்சரிய கேள்விகளை என் அப்பாவிடம் கேட்டது நினைவில் இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு கடல் பார்கிறேன். கடல் பால்யத்தின் கேள்விகளை இன்னும் தனக்குள் வைத்துகொண்டு ஆச்சரியத்தை மட்டும் நமக்கு அளித்துகொண்டிருக்கிறது. 

புவியீர்ப்பு, ராமன் விளைவு என அறிவியல் நம் முன் விரிந்துகிடக்கிறது, கடலை விவரித்துகொண்டிருக்கிறது. கடலின் ஆச்சரியங்களில் குழம்பியவன் விஞ்ஞானி ஆகிறான், அந்த ஆச்சரியங்களை அனுபவிப்பவன் கவிஞன் ஆகிறான். விஞ்ஞானி ஆனாலும் கவிஞன் ஆனாலும் எல்லோரும் கடலின் மடியில் குழந்தையாகிறோம் என்பதே நிஜம். கடலை குழந்தையாக பார்ப்பது எப்போதுமே அலாதியானது.

கல்லூரியின் கடைசி வருடங்களில், வேலைக்கான நேர்முக தேர்வுகளில் தோல்வி என பலமுறை கடலை வெறித்து பார்த்திருக்கிறேன். கையில் காசு இருக்காது, கண்ணில் படும் எந்த பொருளும் நமக்கு சொந்தமாக இருக்காது, ஆனால் இந்த உலகமே நம்முடையதாக இருக்கும். இந்த உன்மத்த நிலையில், சென்னை மாநகரத்தின் பல்லாயிரக்கான மக்கள்அங்கீகாரத்திற்காகவும், வாழ்க்கைகாகவும்  போராடிகொண்டிருக்கிறார்கள்... அவர்களின் ஒரே ஆறுதல் இந்த கடலாக தான் இருக்கும்.


கடல் நூற்றாண்டுகளாக பேசிக்கொண்டிருக்கிறது. கேட்பவர்கள் தான் யாருமில்லை. கடற்கரைக்கு வருபவர்கள் பெரும்பாலும் அவர்களின் சோகத்தையே கொட்டி முழக்குகிறார்கள். கடல் இனம்புரியாத ஒரு மென்சோகத்தை எல்லோரிடமும் பேச எத்தனிக்கிறது. கடலலை தான் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் மென்று முழுங்கி பின் செல்கிறது. அலை அடித்து அடித்து ஓய்வது மகிழ்ச்சியின் ஆரவாரம் இல்லை, விரக்தியின் குறியீடுதான்...

லெமூரியா கற்பனையின் உண்மை தமிழ் சாட்சியங்களை மென்று விழுங்கிய குற்றவுணர்ச்சியை கொட்டித்தீர்க்க முற்படுகிறதோ... தனுஷ்கோடி நாகரிகமும், சுனாமி உயிர்களையும் உண்டு செறித்தும் அடங்காத பசியின் ஏக்கமோ...? நந்திகடலின் கரையோரத்தில் அதனோடு ஊனோடும் உயிரோடும் வாழ்ந்து வந்த மூத்த குடியை கொத்து கொத்தாக கொன்றொழித்த பெரும்சோகத்தில் வெம்பிகொண்டிருக்கிறதோ...? பகலெல்லாம் வெளியே சுற்றி அலையும் ஆண் சூரியன், தினம்தோறும் இரவானதும் தன் காம அனலை உன்னுள் அமிழ்ந்து தகிப்பதில் உண்டான வெறுப்பா...?


 முகத்தில் அப்பும் உப்பு காற்று ஏதேதோ பக்கங்களை புரட்டிப்போடுகிறது.    இமைக்கும் கண்களை போல் கடலும் தன் அலையால் சிமிட்டி சிமிட்டி பார்த்துகொண்டிருக்கிறது யுகங்கள் கடந்து. 

கடற்கரையில் கூட்டம் பெருக ஆரம்பித்தது. எழுந்து சென்று அலைகளோடு என் கால்களை நனைத்துகொண்டேன். கால்கள் சில்லிட்டுகொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக அடி பாத மணல்கள் அரித்துசெல்லும் ஏகாந்த உணர்வை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெறுகிறேன். எனது காலின் சுவையை கடல் அறிந்து இருக்குமா..? என்னை போல மகிழ்ச்சி கொண்டிருக்குமா..? அந்த ஞாயிறு மாலையில் எத்தனையோ பேர் கடலோடு உறவாடியிருந்தார்கள்.

எத்தனை ஆயிரம் கால்கள்; எத்தனை விதமான கால்கள்; எனது ஒரு புறம் கறுத்த வெடித்து காய்ச்சிய கால்களோடு கடலிடம் தன்னை மறந்து கிடந்தார் ஒரு பெரியவர். மறுபுறம் தரையில் கூட பட்டுவிடாத மிக பதுவிசான பட்டு கால்களில் கடலை அனுபவித்துகொண்டிருந்தாள் ஒரு சீமாட்டி. "ஆயிரம் கால்கள் கடலை தழுவினாலும் கடல் தனிமையில் தான் இருக்கிறது" என்ற எஸ்.ராவின் வார்த்தைகளை நினைத்துகொண்டேன். கால் இல்லாத மனிதர் யாரவது இந்த கடலை தழுவியிருப்பாரா? இந்த ஏகாந்தம் அவருக்கு கிடைக்க பெற்றிருக்குமா...? முடவன் கொம்பு தேனுக்கு தான் ஆசை பட கூடாது... பொங்கும் கடலுக்கும் அலையின் நுரைக்குமா ஆசைபடகூடது... இந்த அலையின் ஆசிக்கு கூடவா தன்னை அசுவாசித்துகொள்ளகூடாது...  என் கால் இப்போது மணலோடு புதைந்துபோய் இருந்தது.

நடுகடலில் இருந்து யாரை பார்க்க இப்படி முட்டி மோதி அலையடித்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. அலைபாய்கிறது கடலும் மனமும்.எல்லோரும் பெரும்பாலும் ஒன்று போலவே கடலிடம் விளையாடுகிறார்கள். யாரும் புதிதாக கடலை அணுகவேயில்லை...

மனிதர்கள் போவோர் வருவோரை பார்த்துக்கொண்டே இருந்தேன். அன்றொரு நாள் ஒரு விபச்சாரி இதே கடற்கரையில் என்னை அழைப்பது போல் அழைத்து பாசாங்கு செய்தது காரணமே இல்லாமல் அப்போது நினைவுக்கு வந்தது.



காதலர் இருவர் கரையோரம் காலார நடை பழகி கொண்டிருந்தனர். அந்த காதலி ஒரு கையில் தன் செருப்பும் ஒரு கையில் தன் காதலனையும் பிடித்துகொண்டு ஒய்யாரமாக நடந்துகொண்டிருந்தாள். இரண்டில் ஒன்று எப்போது வேண்டுமானாலும்  கைவிடப்படும் என்று சிரித்துக்கொண்டேன்.



கூட்டம் மேலும் பெருக ஆரம்பித்தது. கடற்கரையை ஆக்கிரமித்த மனிதன்... என் கடல் சிந்தையையும் ஆக்கிரமிக்க தொடங்கினான். விடைபெற முனைந்தேன். ஒரு சிறுமி தன் அப்பாவிடம் கேட்டு கொண்டிருந்தாள் "அய்யோ... எவ்ளோ தண்ணி.... சுப்பர்ல ப்பா...."